ஓராண்டுக்கு பிறகே உட்கட்சி தேர்தல் நடத்த முடிவு
ராமதாசுக்காக மேடையில் காத்திருந்த காலி நாற்காலி
சென்னை
பா.ம.க., தலைவராக வரும் 2026 ஆகஸ்ட் வரை அன்புமணி தொடர்வார் என, அக்கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உடனான மோதல் முடிவுக்கு வராத நிலையில், அன்புமணி தலைமையில், மாமல்லபுரத்தில் நேற்று பொதுக்குழு கூட்டம் நடந்தது.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ம.க., தலைவர் அன்புமணி, பொதுச்செயலர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோரின் செயல்பாடுகள் மீது பா.ம.க., முழு நம்பிக்கை கொண்டுள்ளது. கட்சியின் அமைப்பு விதிகளின்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உட்கட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும். வரும் 2026ல் சட்டசபை தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட வேண்டியிருக்கும்.
கடந்த காலங்களில் தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெற்று, உட்கட்சி தேர்தல் தாமதமாக நடத்தப்பட்டுள்ளன. இதை உதாரணமாக கொண்டு, பா.ம.க., உட்கட்சி தேர்தல் மேலும் ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்படுகிறது. 2026 ஆகஸ்ட் மாதத்தில் உட்கட்சி தேர்தல்கள் நடத்தப்படும். அதுவரை, பா.ம.க., தலைவராக அன்புமணி, பொதுச்செயலராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா ஆகியோர் தொடர்வார்கள். இதற்கு பொதுக்குழு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கிறது.
தமிழகத்தில் அனைத்துத் தரப்பினராலும் வெறுக்கப்படும், கொடுங்கோல் தி.மு.க., அரசை வரும் சட்டசபை தேர்தலில் வீழ்த்த பா.ம.க., உறுதியேற்கிறது.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுத்தால், பா.ம.க., சார்பில், மக்களைத் திரட்டி, மிகப்பெரிய அளவில், சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.
பொதுக்குழுவில் அன்புமணி பேசியது:
ராமதாஸ் ஒரு தேசியத் தலைவர். சமூக சீர்திருத்தவாதி. எங்களுக்கு அரசியலையும், சமூக நீதியையும் கற்றுக் கொடுத்தவர். ஆனால், இப்போது அவரால் கட்சியை நிர்வகிக்க முடியாத சூழல் இருக்கிறது. சில நேரங்களில் சாமிக்கு கொஞ்சம் கோபம் வந்து விடும். அப்போது திருவிழா நடத்துவோம். காவடி எடுப்போம். இதில் பூஜாரி தான் இடையில் பிரச்னை செய்வார். ராமதாஸை சுற்றியுள்ள சில சுயநலவாதிகள், தீய சக்திகள், குள்ளநரி கூட்டம், பொய்களைச் சொல்லி, சொல்லி அவரை ஏமாற்றுகிறார்கள்.
நான் பிடிவாதக்காரன் அல்ல. உறுதியானவன். யாராவது வந்து பேசி சமதானப்படுத்தினால், சமாதானமாகி விடுவேன். பல செய்திகளை என்னால் சொல்ல முடியாது. சொல்லவும் போவதில்லை. ஆனால், செய்ய வேண்டியதை செய்வேன்.
ராமதாஸிடம் 40 முறை பேசி விட்டேன். நேற்றுகூட பேசினேன். நான் பேசினால் காலையில் சரி என்பார். பிறகு பூஜாரிகள் சொன்ன பிறகு, அடுத்த நாள் இல்லை என்பார். ராமதாஸின் மானம், மரியாதை தான் நமக்கு முக்கியம். ஒருதலைபட்சமாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கு பதில் சொல்லி கொண்டிருந்தால் ராமதாஸின் பெயர் கெட்டுவிடும்.
நிர்வாகிகள் நியமனத்தில் இருவரும் இணைந்து கையெழுத்து போடுவோம் என்பதை, 15 நாட்களுக்கு முன்பு ஒப்புக் கொண்டார். பிறகு நான் மட்டுமே நியமிப்பேன் என்று கூறிவிட்டார். அதற்கு நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். எந்தவொரு கட்சிக்கும் நிரந்தர தலைவர் இருக்க முடியாது. நிறுவனர்தான் நிரந்தரம். பொதுக்குழு முடிவு செய்பவர்தான் தலைவர். வரும் 2026 சட்டசபை தேர்தலில் பா.ம.க.,வுக்கு மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
மாநில செய்தித் தொடர்பாளர் பாலு, முன்னாள் மத்திய இணை அமைச்சர்கள் அரங்க வேலு, சண்முகம், எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடேஸ்வரன், சிவகுமார் உள்ளிட்ட, 3000க்கும் அதிகமானோர் பொதுக்குழுவில் பங்கேற்றனர்.
விரைவில் கூட்டணி :
‘தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வரக் கூடாது, யார் வர வேண்டும்’ என பா.ம.க.,வுக்கு இரண்டு இலக்குகள் உள்ளன. வன்னியர்கள், பட்டியலின மக்களின் துரோகி தி.மு.க., ‘மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம், யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விரைவில் அறிவிப்போம். கட்சி நிர்வாகிகளின் விருப்பப்படியே கூட்டணி அமையும்’ என்றார் அன்புமணி.
பொதுக்குழுவில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பங்கேற்கவில்லை. ஆனாலும், அவருக்காக நாற்காலி போடப்பட்டிருந்தது. இதை குறிப்பிட்டு பேசிய அன்புமணி, ‘ராமதாஸ் தான் நமது குல தெய்வம். இந்த பொதுக்குழுவில் உருவத்தில் அவர் இல்லாவிட்டாலும், உள்ளத்தில் இருக்கிறார். அவருக்கு பொதுக்குழுவில் நிரந்தர நாற்காலி இருக்கிறது. அவர் எப்போது வேண்டுமானாலும் வரலாம். வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்றார்.
