சென்னை, நவ. 28:
வரவிருக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணியில், வாக்காளர்கள் தங்களுக்கான கணக்கீடு படிவங்களை முறையாக பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும்; அவ்வாறு செய்தால்தான் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
சென்னையை சேர்ந்த 16 சட்டசபை தொகுதிகளிலும், நவம்பர் 4ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு தோறும் சென்று கணக்கீடு படிவங்களை வாக்காளர்களிடம் வழங்கினர். படிவங்களை சரியாக நிரப்பி வழங்க வேண்டும் என்பதற்காக, மாநகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
மேலும், ஒவ்வொரு ஓட்டுச்சாவடிகளிலும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, நேரடியாக வந்து படிவங்களை பூர்த்தி செய்து வழங்கும் வசதியும் செய்யப்பட்டிருந்தது. தற்போது, வாக்காளர்களிடம் கிடைத்த படிவங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் செயலியில் (App) பதிவேற்றப்படும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்னும் படிவங்களை பூர்த்தி செய்யாத வாக்காளர்களுக்கு உடனடியாக அதை நிறைவேற்றி, சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாநகராட்சி கமிஷனருமான குமரகுருபரன் தெரிவித்ததாவது:
“வாக்காளர்கள், டிசம்பர் 4ஆம் தேதிக்குள் தங்களுக்கு வழங்கப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்து, அதனை உடனடியாக ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் வழங்க வேண்டும். படிவம் சரியாக திரும்ப ஒப்படைக்கப்பட்டால்தான் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். இறுதி நாள்வரை காத்திருக்காமல் விரைவாக படிவங்களை ஒப்படைக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் மிக முக்கியமான இந்த பணியில் வாக்காளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
பூர்த்தி செய்த படிவங்களை ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஏற்காமல் இருந்தால், 1913 என்ற மாநகராட்சி உதவி எண்னை உடனடியாக தொடர்பு கொள்ளலாம்,” என்று தெரிவித்தார்.
