சென்னை, ஆக:
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில், ‘நத்தம்’ வகைப்பாட்டில் உள்ள மொத்தம் 39,428 நிலங்களுக்கு, நிலவரி திட்டத்தின் கீழ் பட்டா வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் வீடு கட்ட ஒதுக்கப்படும் குடியிருப்பு நிலங்கள், வருவாய் துறையால் ‘நத்தம்’ நிலமாக வகைப்படுத்தப்படுகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக, ஊரகப் பகுதிகளில் உள்ள இந்நிலங்களுக்கு, நிலவரி திட்ட நடைமுறைகளின் படி ‘ரயத்துவாரி மனை’ என மாற்றி பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், நகர்ப்புற பகுதிகளில், நகர நிலவரி திட்டம் வழியாக மட்டுமே பட்டா வழங்க முடியும். இதற்கான அரசின் அனுமதி இன்றைய வரை இல்லாததால், பணிகள் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்தன.
வருவாய் துறை வெளியிட்டுள்ள புதிய அரசாணைபடி, ‘அ’ பதிவேட்டில் ‘கிராம நத்தம்’ அல்லது ‘வீட்டு மனை’ என பதிவாகியுள்ளதுடன், நகர நில அளவை பதிவேட்டில் ‘சர்க்கார் புறம்போக்கு – நத்தம்’ என குறிக்கப்பட்ட நிலங்களுக்கு, நகர நிலவரி திட்டத்தின் கீழ் பட்டா வழங்க முடியும்.
இதன்படி:
- செங்கல்பட்டு, கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவாரூர், கோவை, மதுரை, தேனி, தென்காசி, சிவகங்கை, திண்டுக்கல், வேலூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 22,076 சர்வே எண்கள் தொடர்பான நிலங்களுக்கு, சம்பந்தப்பட்ட தாசில்தாரின் அனுமதியுடன் பட்டா வழங்கப்படும்.
- சென்னை, திருவள்ளூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள 17,352 சர்வே எண்கள் ‘ரயத்துவாரி மனை’ என வகை மாற்றம் செய்யப்பட்டு, பட்டா வழங்கப்படும்.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடைமுறைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர்கள் சிறப்பு தாசில்தார்களுக்கு விரிவான சுற்றறிக்கை வழங்குவார்கள்.