சென்னை, ஆக. 17 –
அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு விதித்துள்ள 50% இறக்குமதி வரி காரணமாக, தமிழகத்தில் ஜவுளித் துறையே அதிகம் பாதிக்கப்படும் என்றும், இதனால் சுமார் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமருக்கு எழுதிய அவசரக் கடிதத்தில், தமிழகத்தில் ஜவுளித் துறை மட்டுமே 75 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கச் சந்தையை அதிகம் சார்ந்திருப்பதால், பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் தாக்கம் கடுமையாக இருக்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடியை சமாளிக்க, ஜவுளித் துறைக்கான ஜிஎஸ்டி முரண்பாடுகளை சரிசெய்தல், பருத்தி இறக்குமதிக்கு சுங்கவரி விலக்கு, வட்டி மானியம், RoDTEP நன்மையை உயர்த்துதல், ஏற்றுமதி கடன்களுக்கு தற்காலிகத் தடை உள்ளிட்ட அவசர நடவடிக்கைகள் அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பணப்புழக்கத்தை மேம்படுத்த ஏற்றுமதியாளர்களுக்கு சிறப்பு வட்டி மானியத் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், சுங்கவரி தாக்கத்தை சமாளிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
கோவிட் காலத்தில் அளிக்கப்பட்ட சலுகைகளைப் போல, ஏற்றுமதியாளர்களுக்கான சிறப்பு நிவாரணத் திட்டம் அறிவிக்கப்பட வேண்டும் என்றும், இதன் மூலம் தமிழ்நாட்டின் தொழில்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சிக்கலை சமாளிக்க மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.