புதுடில்லி: கடந்த ஆறு ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடாத 334 அரசியல் கட்சிகளின் பதிவை, தேர்தல் கமிஷன் நீக்கியுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 22 கட்சிகளும் அடங்கும்.
நம் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், 1951ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 29A-இன் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. இப்பதிவின் மூலம் கட்சிகள் வரிவிலக்கு உள்ளிட்ட பல நன்மைகளைப் பெறுகின்றன. ஆனால், பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகள், ஆறு ஆண்டுகளுக்குள் குறைந்தபட்சம் ஒரு தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது கட்டாய நிபந்தனை.
தேர்தல் கமிஷன் ஆய்வில், 345 கட்சிகள் 2019ம் ஆண்டு முதல் எந்த தேர்தலிலும் பங்கேற்காதது தெரியவந்தது. மேலும், பல கட்சிகள் பதிவு செய்யப்பட்ட முகவரியிலும் செயல்படவில்லை.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டது. விசாரணைக்குப் பிறகு, தேர்தல் கமிஷன் விதிமுறைகளை பூர்த்தி செய்யாத 334 கட்சிகள் நீக்கப்பட்டன.
இந்த நீக்கப்பட்ட பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ‘அண்ணா – எம்.ஜி.ஆர்.’, ‘ஜெயலலிதா திராவிட முன்னேற்றக் கழகம்’, ‘அப்பா – அம்மா மக்கள் கழகம்’, ‘இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி’ உள்ளிட்ட 22 கட்சிகள் உள்ளன.
இந்நடவடிக்கையால் அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 2,854ல் இருந்து 2,520 ஆகக் குறைந்துள்ளது. தற்போது, ஆறு தேசியக் கட்சிகளும், 67 மாநிலக் கட்சிகளும் தேர்தல் கமிஷன் அங்கீகாரப் பட்டியலில் உள்ளன.