ரூ.2 கோடி கட்டடத்தை அபகரிக்க உடந்தை தாசில்தார் மீது குற்ற நடவடிக்கைக்கு அறிவுரை

by admin
Spread the love

சென்னை-
திருப்பூரில், 2 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடத்தை அபகரிக்க உடந்தையாக இருந்ததுடன், அதிகார துஷ்பிரயோகம் செய்த துணை தாசில்தார், சார் – பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்க, பனியன் கம்பெனி உரிமையாளரை, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில், வெங்கடாசலம் என்பவருக்கு சொந்தமான நிலத்தை வாடகைக்கு பெற்று, ஜெகன்நாதன் என்பவர், பனியன் கம்பெனி துவக்கினார்.
இந்நிலத்தில், 2 கோடி, 3 லட்சத்து, 9,213 ரூபாய் வரை செலவிட்டு, கட்டடங்கள், இயந்திரங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன.
மிரட்டல் புகார்
வாடகை ஒப்பந்தத்தை புதுப்பிக்க முயற்சித்த போது, உடன்பாடு எட்டப்படாததால், கட்டுமானங்களுக்கு செலவிட்ட தொகையை, திரும்ப வழங்கும்படி ஜெகன்நாதன் கோரினார்.
ஆனால், நிலத்தின் உரிமையாளர் வெங்கடாசலமும், அவரது மனைவியும் துணை தாசில்தாருமான கீர்த்தி பிரபா, காவல் ஆய்வாளர் கணேசன் ஆகியோர் மிரட்டல் விடுத்ததாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஜெகன்நாதன் வழக்கு தொடர்ந்தார்.
மனுவில் கூறப்பட்டுஉள்ளதாவது:
பனியன் தொழிற்சாலை அமைந்திருந்த நிலம், மோசடியாக விவசாய நிலம் எனக்கூறி, துணை தாசில்தார் கீர்த்தி பிரபாவுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுஉள்ளது.
இதற்கு, நல்லுார் சார் – பதிவாளர் நாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள், தங்கள் பதவியை தவறாக பயன்படுத்தி உள்ளனர்.
ஒழுங்கு நடவடிக்கை
அதிகார துஷ்பிரயோகத்தில், துணை தாசில்தார் கீர்த்தி பிரபா, காவல் ஆய்வாளர் கணேசன், சார் – பதிவாளர் நாகராஜன் உள்பட, ஐந்து அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து, அரசு தான் முடிவெடுக்க முடியும்.
அதிகாரிகள் குற்றத்தில் ஈடுபட்டிருந்தால், அவர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீசில் கிரிமினல் புகார் அளிக்குமாறு மனுதாரரை அறிவுறுத்தினார்; வழக்கை முடித்து வைத்தார்.

Related Articles

Leave a Comment