சென்னை உயர் நீதிமன்றம், பொதுமக்களுக்கு ஆபத்தாக விளங்கும் ‘ராட்வைலர்’ போன்ற ஆக்ரோஷ நாய்களுக்கு கட்டுப்பாடு விதிக்க, சென்னை மாநகராட்சி தலைமை கால்நடை மருத்துவ அதிகாரி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.
கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்றி, முகக்கவசம் அணியாமல் வெளிநாட்டு இன நாய்களை தெருக்களில் அழைத்து செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இதனால் சிறுவர், பெண்கள், மூத்த குடிமக்கள் கடிக்கு ஆளாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற ஆபத்தான நாய்களை தடைசெய்யவும் அல்லது கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிய மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது.
மாநகராட்சி தரப்பில், பொது மக்களை நாய் தாக்கும் சம்பவங்களை தடுக்கும் திட்டம் விரைவில் தாக்கல் செய்யப்படும் எனவும், அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து, நீதிமன்றம், ‘ராட்வைலர்’ உள்ளிட்ட ஆபத்தான நாய்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் திட்டத்துடன் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு மாநகராட்சி தலைமை கால்நடை மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டது.