சீனாவின் நெருக்கடி காரணமாக மின்சார வாகன உற்பத்தி தடை – பஜாஜ் ஆட்டோ எச்சரிக்கை

by admin
Spread the love

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை பயன்படுத்தி பல நிறுவனங்கள் புதிய மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் கார்களை வரிசையாக வெளியிட்டு வருகின்றன. ஆனால், இந்த வளர்ச்சிக்குச் சீனாவிலிருந்து ஒரு பெரிய தடையாக உருவாகியுள்ளது.

அரிய வகை காந்தத்தின் முக்கியத்துவம்:

மின்சார வாகனங்களில் பேட்டரிகளிலிருந்து துவங்கி அதன் முக்கிய பாகங்களெல்லாம் அரிய வகை காந்தங்களை அடிப்படையாகக் கொண்டவை. இந்த காந்தங்களை பிரித்து தூய்மைப்படுத்தி வாகன உற்பத்திக்குத் தேவையான நிலையில் கொண்டு வரும் தொழில்நுட்பம் சீனாவிடம் மட்டுமே உள்ளது. அதனால் உலகளவில் 90% க்கும் அதிகமான அரிய வகை காந்தங்களை சீனாவே சப்ளை செய்து வருகிறது.

சீனாவின் சப்ளை நிறுத்தம் – உலகளாவிய பாதிப்பு:

சீனா மற்றும் பல நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட வர்த்தக மோதலின் காரணமாக, சீனா இந்த அரிய காந்தங்களின் ஏற்றுமதியை ஏப்ரல் மாதத்திலிருந்தே தற்காலிகமாக நிறுத்திவிட்டது. இதனால் உலகளவில் ஆட்டோமொபைல் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளில் மின்சார வாகன உற்பத்தி மந்தமடைந்துள்ளது.

பஜாஜ் ஆட்டோவின் கவலை:

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளர்களில் ஒருவரான பஜாஜ் ஆட்டோவின் மேலாண் இயக்குநர் ராஜீவ் பஜாஜ், எக்கனாமிக் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், “சீனாவின் இந்த முடிவால் எங்களது மின்சார வாகன உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால் ஆகஸ்ட் மாதத்திலேயே உற்பத்தியை முற்றிலும் நிறுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலங்களில் பாதிப்பு அதிகம்:

இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி போன்ற முக்கியமான பண்டிகைகள் நெருங்கி வருகின்றன. பொதுவாக இந்த காலங்களில் வாகன விற்பனை அதிகரிக்கும். ஆனால், இப்போது உற்பத்தி குறைவடைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தோடு மின்சார வாகன உற்பத்தி முற்றிலும் நின்று விடும் அபாயம் உள்ளது என அவர் எச்சரித்துள்ளார்.

சேடக் மற்றும் கோகோ வாகனங்கள் பாதிக்கப்படுகின்றன:

பஜாஜ் ஆட்டோ சமீபத்தில் சேடக் ஸ்கூட்டர் மற்றும் மூன்று சக்கர மின்சார வாகனமான கோகோவை அறிமுகப்படுத்தி, விற்பனையில் முக்கிய சந்தையை பிடிக்கத் தொடங்கியுள்ளது. இப்போது இந்த வாகனங்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கும்போதும், உற்பத்திக்கு தேவையான காந்தங்கள் இல்லாததால் விற்பனைக்கு தயாராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது உற்பத்தி பாதியாக குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாற்று தீர்வு தேவை:

இந்த சிக்கலைத் தீர்க்க இந்திய அரசு தலையிட்டு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என ராஜீவ் பஜாஜ் கோரிக்கை விடுத்துள்ளார். சீனாவைத் தவிர வேறு நாடுகளிலிருந்து இந்த வகை காந்தங்களை வாங்குவது சாத்தியமானதாக இருந்தாலும், அது உடனடியாக நடைமுறைக்கு வரவில்லை. மேலும், மாற்று ஆதாரங்களில் இருந்து காந்தங்களை வாங்கும் போது, அதன் செலவு அதிகரிக்கும். இதனால் உற்பத்தி செலவு உயரும், அதே நேரத்தில் வாகனங்களின் விலையும் அதிகரிக்கும் என்றார்.

Related Articles

Leave a Comment