Home அரசியல் சினிமாவில் நடிப்பது மட்டும் அரசியலுக்கு போதுமானதல்ல: மதுரை ஆதீனம்

சினிமாவில் நடிப்பது மட்டும் அரசியலுக்கு போதுமானதல்ல: மதுரை ஆதீனம்

by admin

சினிமாவில் நடிப்பது மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு. மக்களுக்காக தொண்டு செய்வது தான் அரசியல்,” என, மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கஞ்சனுாரில், மதுரை ஆதீனம் 293வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் அளித்த பேட்டி: ரம்ஜான் பண்டிகைக்கு தமிழக அரசு மூலம் அரிசி உள்ளிட்டவைகள் வழங்கப்படுகின்றன. அதை செய்யும் அரசு, ஹிந்து கோவில்களுக்கும் திருவிழாக்களின் போது, கூழ் ஊற்றுவதற்கு அரிசி உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும். எல்லோருக்கும் பொதுவான அரசு, பண்டிகைகளில் மதம் பார்த்து செயல்படக் கூடாது.

வரும் 2028ம் கும்பகோணத்தில் மகாமக பெருவிழா கொண்டாடப்படும். அதை, அரசு மிகப் பெரிய அளவில் முன்னெடுக்க வேண்டும். அதற்கான முன்னேற்பாடுகளை இப்போதிலிருந்தே திட்டமிட்டு செய்ய வேண்டும்.

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை உள்ளது. அப்படிப்பட்ட சூழல் மாற வேண்டும். கடுமையாக உழைத்து, யாரெல்லாம் மக்கள் பணியாற்றி உள்ளனரோ, அவர்களே அரசியலுக்கு வர வேண்டும். அப்போதுதான், மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்து, அவர்கள் மக்கள் பணியாற்றுவர்.

சினிமாவில் நடிப்பது மட்டும் அரசியலுக்கு போதும் என நினைத்து, நடிகர்கள் பலரும் அரசியலுக்கு வர நினைக்கின்றனர். அது தவறு. அரசியலுக்கு சினிமா தேவையில்லை. மக்களுக்கு தொண்டாற்றும் மனநிலைதான் முக்கியம். யாரையும் மனதில் வைத்து இதைக் குறிப்பிடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Leave a Comment